Site icon இன்மதி

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற் கல்வி விருப்பப் பாடம் புதிதாக அறிமுகம்

135_C

Read in : English

இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற் கல்வி விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் சோதனை முயற்சியாக ரூ.3.55 கோடி செலவில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆட்டோமோட்டிவ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் ஹார்டுவேர், அப்பேரல்ஸ், மேட் அப்ஸ் அண்ட் ஹோம் ஃபர்னிஷிங், அக்ரிகல்சர், பியூட்டி அண்ட் வெல்னஸ் ஆகிய ஐந்து தொழிற் பிரிவுகளில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் சேரலாம்.

தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) கீழ் செயல்பட்டு வரும் பண்டிட் சுந்தர்லால் சர்மா சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வொகேஷனல் எஜுக்கேஷன் அமைப்பு இதற்கான பாடத்திட்டதை வடிவமைத்துள்ளது. இதனை மாநிலக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சிக் கவுன்சில் (SCERT) இந்தப் பாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கும். தொழிற்துறையின் ஒத்துழைப்புடன் பாடங்கள் நடத்தப்படும்.

இந்தத் தொழிற் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை வழங்கும். அத்துடன், தேசியத் திறன் மேம்பாட்டுக் கார்ப்பரேஷன் (National Skill Development Corporation), செக்டர் ஸ்கில் கவுன்சில் (Sector Skill Council) ஆகியவை இணைந்து பயிற்சி முடித்தற்கான சான்றிதழை வழங்கும்.

“1978-79ஆம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்டபோது, தொழிற் பயிற்சிக் கல்வி  படிப்புகள் (Vocational Courses) பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் தொடங்கப்பட்டன. அதற்கு முன்னதாக எஸ்எஸ்எல்சியில் (11ஆம் வகுப்பில்) தொழிற் பயிற்சிப் பாடம் விருப்பப் பாடமாக இருந்தது”” என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.என். ஜனார்தன்.

“பிற மாநிலங்களில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் யோசனைப்படி, இந்த ஆண்டில்தான் இத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொழிற் பயிற்சியில் ஆர்வமிக்க மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி கட்டாயம் கிடையாது. மற்ற வகுப்புகளைப் பாதிக்கும் வகையிலும் இப்படிப்பு இருக்காது. அந்தந்தப் பள்ளிகளில் மாணவர்கள் சேருவதைப் பொருத்து இப்படிப்புகள் விரைவில் தொடங்கப்படும். கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் தனி வகுப்புகள் நடத்தப்படும்” என்கிறார் அவர்.

Share the Article

Read in : English

Exit mobile version