Site icon இன்மதி

நீட் தேர்வு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிடைத்த கருணை மதிப்பெண்கள் மூலம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குகைக்கு எட்டும் தூரத்தில் இருந்த எம்பிபிஎஸ் கனவு, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினால் கைக்கு எட்டியும்கூட வாய்க்கு எட்டாமல் போய்விட்டது.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எம்பிபிஎஸ் கனவுகளுடன் இருந்த தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவால் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டால், தங்களது வாய்ப்புப் பறிபோய் விடுமோ என்ற கவலையில் இருந்த ஏற்கெனவே எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற்ற மாணவர்கள் தங்களுக்கு இனிமேல் ஒன்றும் ஆகாது என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

நீட் தமிழ் வினாத்தாளில் இருந்த தவறுகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்ட கிளாட் ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களுக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக் காட்டிய மாணவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கருணை மதிப்பெண்கள் மூலம் தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் பேரில் 500 பேர்தான் பயன் பெறுவார்கள் என்றும் விளக்கினார்.

தமிழக அரசு வழங்கிய மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்தான் கேள்விகள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும், கருணை மதிப்பெண்கள் வழங்குவதால் ஏற்கெனவே இடங்களைப் பெற்றுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ தரப்பில் வாதிடப்பட்டது.

நீர் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாள் தயாரிக்கப்பட்டதில் தவறு உள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுககுக் கருணை மதிப்பெண்களை வழங்குவது தீர்வாக இருக்காது என்றும் அது மற்ற மாணவர்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் குறிபிட்டனர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தகுந்த அமைப்பு முறைகளை ஏற்படுத்துவது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்று தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தனர். தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கைத் தொடரவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல .வழக்குத் தொடர்ந்த மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், “இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு தமிழில் நீட் தேர்வு எழுதி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக வாதாடாமல் இருந்தது அநியாயம்” என்று குறிப்பிட்டார்.

“ஏற்கெனவே உள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 7ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்திருக்கும்” என்றார் அவர்.

வழக்கின் இறுதி விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, எதிர்காலத்தில் நீட் தேர்வில் தவறுகள் ஏற்படாமல் இருக்கப் பரிதுரைகள் செய்யலாம். ஆனால், நீட் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்புத் தவறு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன நீதி வழங்கப் போகிறதோ தெரியவில்லை.

Share the Article
Exit mobile version