Site icon இன்மதி

அரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்?

சமீபத்தில், போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி ஆனந்தன், என்கவுண்டர் செய்யப்பட்டார். அவரின் இறுதி சடங்கில், அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விருகை ரவி வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கலந்துக்கொள்கிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். தனக்கு சாதகமாக சிலகாரியங்களை செய்து கொடுக்கிறார் என்பதற்காக, வெளிபடையாகவே அந்த ரவுடிக்கு அஞ்சலி செலுத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  இருக்கிறது.

இதை எதிர்கட்சிகள் கூட கண்டும்காணாமலும் இருக்கின்றனர். பின்பு எப்படி அரசியல் வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.   ரவுடிகளுக்கு அரசியல்வாதிகள் இப்படி துணை நின்றால் நாட்டில் எப்படி மக்கள் அச்சம் இல்லாமல் வாழ முடியும்.
எனவே, அரசியல்வாதிகள், எப்போது, தன்னை சுத்தப்படுத்தி கொள்கிறார்களோ அப்போது தான், ரவுடிகளின் ராஜ்ஜியமும் ஒழியும் என்கின்றனர் சமூக  ஆர்வளர்கள்.

அரசியல்வாதிகள்,  ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், பின்னர் அவர்களால் அச்சுறுத்தல் வரும் போது, ஆட்சியாளர்களை வைத்து , போலீசார் சுட்டுக்கொல்வதும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஏன்? இவர்களால்  ரவுடிகள்  துணையில்லாமல், அரசியல்   செய்யமுடியாதா  என்ற மில்லியன் டாலர்  கேள்வியும் எழுகிறது.

அடியாட்கள் கலாச்சாரம்
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த, காந்தியும் அரசியல்வாதி தான், ஆனால் அவர் தன்னுடன் அடியாட்களை வைத்தது கிடையாது. பெரியாரும், அண்ணாவும் அரசியல்வாதிகள் தான், ஆனால் அவர்கள் யாரும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை. காமராஜரும், நம் தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்டார். ஆனால், அவருக்கு தெரிந்தது எல்லாம் ஏழை குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான். ஆனால், அவர் காலத்திலேயே அடியாட்கள் கலாச்சாரத்தை ஒரு கட்சி ஏற்படுத்தியிருந்தது. விருதுநகர்  தேர்தலில், காமராஜர் போட்டியிட்டார். அப்போது இருந்த ஜஸ்டிஸ் கட்சியும் தேர்தலில் நின்றது.  அப்போது, அந்த கட்சியினர், அடியாட்களை ஏற்பாடு செய்து, காமராஜரை கடத்தி சென்றனர். அப்போது, பசும் பொன் முத்துராமலிங்க தேவர், மேடையில் இருக்கும் போது, நான் பேசி முடிப்பதற்குள்  காமராஜர் என் கண் முன்னால் இருக்க வேண்டும், இல்லையென்றால், நடப்பதே வேறு என கர்ஜித்தார். அவர் சொன்னது போன்று காமராஜரும் வந்து சேர்ந்தார் என கூறப்பட்டது. .

ஆனால், அதன் பிறகு  வந்த திமுக, அதிமுக மறைமுகமாக ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து,  தங்களின் வேலைகளை முடித்துக்கொண்டனர்.  பின்னர், அந்த ரவுடிகளை  அவர்களே அழித்ததாகவும், ஆதாரம் இல்லாத தகவலாதான் உலா வருகிறது.

விருகை ரவி, ரவுடி ஆனந்தன்

சிறையில் கொலை
சென்னையில் மூன்று ரவுடிகள் கோலோச்சி கொண்டிருந்த காலம். எண்ணூர் நாராயணன், காசிமேடு பாக்சர் வடிவேலு, அயோத்திக்குப்பம் வீரமணி, இவர்கள் பெரிய ரவுடிகளாக வலம் வந்தனர். தெலுங்கு நடிகர் ராஜசேகர் நடித்த ஓம் என்ற  தமிழ் திரைப்படத்தில்,  இந்த மூன்றுதாதாக்களை காண்பித்தார்கள். அந்தளவுக்கு, பிரபலமாக இருந்தார்கள்.

திமுக ஆட்சியின் போது மத்திய சிறைச்சாலை சென்ட்ரல்பகுதியில் இருந்தது. அப்போது, பாக்சர் வடிவேலு அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

திடீரென, அந்த சிறையில் கலவரம். ஜெயிலர் எரிக்கப்பட்டார். பாக்சர் வடிவேலு கொல்லப்பட்டார் என்ற செய்தி மட்டும் தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது.

பாக்சர்வடிவேலு கொலையில் அரசியல் சாயம் பூசப்பட்டது. அது எந்தளவிற்கு உண்மை என இன்னும் விளங்கவில்லை.  ஏதோ செய்திவெளியிட்ட காரணத்தால், தராசு பத்திரிகை அடித்து நொறுக்கப்பட்டது.

அயோத்திக்குப்பம் வீரமணி, ஜெயலலிதாவின் எதிரிகளை ஒழிக்க பயன்பட்டார். அதே அதிமுகவில் கட்சி பதவி கேட்டு ஜெயலலிதாவுக்கே மிரட்டல்விட்டபோதுதான், வீரமணியும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு தான், ஜெயலலிதா ரவுடிகள் இனி தேவையில்லை  என முடிவு கட்டினார். அன்றையில் இருந்து, ரவுடிகளுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

திமுகவில் அதிகம்
திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கும், கட்சி பதவி கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு, சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரைசேர்ந்தவர் பிரபல ரவுடி சுந்தர், இவர்களால் பாதிக்கப்பட்டவர். அந்தபகுதியை சேர்ந்த ஒற்றவாடை சண்முகம். இவர் ஆரம்பத்தில் தனதுவாழ்க்கையை பட்டறையில் ஓட்டினார். சுந்தரை பழிவாங்க துடித்தார். அப்போது இவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதிமுக நிர்வாகிசந்திரசேகரை கொல்வதற்கு, அவர்களின் கட்சியிலேயே பணம் கொடுக்கப்பட்டது. அதன்படி சண்முகம் தனது மூன்று தம்பிகளை வைத்து, சந்திரசேகரை தீர்த்து கட்டினார். ஆனால், அதன்பிறகு அதிமுக சண்முகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பின்னர், திமுகவில் சேர்ந்தார். வட்டசெயலாளர் பதவி வாங்கினார். சிறுபசங்க சண்டையில் மூக்கை நுழைத்து, அதில் சண்முகம் கொல்லப்பட்டார். ஆனால், அதுவும் அரசியல் படுகொலை தான் என்கின்றனர்.

நிலங்கள் அபகரிப்பு
ஊரான் நிலத்தை அபகரிப்பதற்கும், கடன் கொடுத்து, அதிக வட்டிகேட்டு வீட்டை எழுதி வாங்குவதற்கும், தன்னுடைய அரசியல் எதிரிகளை ஒழித்து கட்டுவதற்கும், ரவுடிகள் தேவைப்படுகிறார்கள், இது திமுக ஆட்சியில் நிறையவே நடந்துள்ளது. சேலத்தில், அங்கம்மாள் காலனியை வளைத்துப்போட்டு, பின்னர், ஜெயிலுக்கு போனவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர், ரவுடிகள் துணையோடு தான், அத்தனையும் செய்தார். தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் ரங்கநாதன், திமுக ஆட்சியில், அம்பத்தூரில், கோடிகணக்கில் விலைப்போகும் நிலத்தை, ரவுடிகளைவைத்து மிரட்டி அபகரித்ததாக  சந்தேகப்படுகிறது.
கொளத்தூரில், வி.எஸ்.பாபு தம்பி கடன் கொடுத்து, அநியாய விலைக்கு வீடுகளை எழுதி வாங்கினார். இது ஒரு பக்கம் இருந்தாலும், திமுகவில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் மகன், அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி தம்பி, ஆகியோர் ஒரு படிக்கு மேலாக சென்றனர். நீலாங்கரையில், ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் மற்றும் அவரின் மனைவியை சுட்டுக்கொன்று, நிலப்பத்திரம் அபகரிக்கப்பட்டது. அந்த வேலையை செய்து கொடுத்த ரவுடி ஒருவர், காவல் நிலையத்தில்வைத்தே, லாக்க  அப்பில் கொலை  செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு திடீர் நெஞ்சு வலி என அப்போது கூறப்பட்டது..

Share the Article
Exit mobile version