Site icon இன்மதி

நரை வயதில் சோதனைக் குழாய் குழந்தை : விவாதத்தை எழுப்பும் ஐ.வி.எஃப் தொழில்நுட்ப முன்னேற்றம்.

செந்தமிழ்செல்வி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோர் மே 21 அன்று பிறந்த குழந்தையுடன்

Read in : English

வெள்ளியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சுகாதார, மருத்துவ பணியாளர்களிடையே ஒரு விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், மே 21ம் தேதி, இன்விட்ரோ

ஃபெர்டிலைசேஷன் மூலமாக கிருஷ்ணனும், செந்தமிழ்ச்செல்வியும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகி இருப்பது பெருமிதத்துடன் அறிவிக்கப்பட்டது. 63 வயதில், அனேகமாக தமிழகத்தின் மிக வயதான

தாய் செந்தமிழ்ச்செல்விதான். அவரது கணவர் கிருஷ்ணனுக்கு 71.

இந்த தம்பதிக்கு, அவர்களின் 40 ஆண்டுகால கனவு நனவாகியிருக்கிறது.அவர்களுக்கு திருமணம் முடிந்து 40 வருடங்களாகின்றன. கிருஷ்ணன், தமிழ்நாட்டில் பல டெக்ஸ்டைல் மில்களில் பணிபுரிந்தவர்.

கிருஷ்ணனின் மூத்த அண்ணனது மகன்களை, தனது குழந்தைகளாக வளர்த்திருக்கிறார் செந்தமிழ்ச்செல்வி. பிணைந்த ஒரு கூட்டுக் குடும்பத்தைப் பொறுத்தவரை, அப்படித்தான் இருக்கமுடியும் என்கிறார் கிருஷ்ணன்.

குழந்தை கருவுறுதலுக்கான சிகிச்சையைத் தொடங்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், 1998ல் கிருஷ்ணனுக்கு செய்யப்பட்ட பைபாஸ் இருதய சிகிச்சை காரணமாக அந்த முடிவை நிறுத்திவிட்டார்கள். அவரது அண்ணன் மகன்கள் வளர்ந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்ததும், எங்களது கனவான குழந்தையை பெற்றுக்கொள்ளுமாறு ஊக்கம் தந்தார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

ஒரு பெண் மாதவிடாய் நிற்கும் காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலோ, அல்லது நின்று விட்டாலோ கூட ஐ.வி.எஃப் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளமுடிவதை சாத்தியப்படுத்தி இருக்கிறது சமீபத்திய மருத்துவ சாதனைகள். எனினும், பலன்களை விட தாய்க்கு அபாயங்களே அதிகம் இருப்பதாக சில மருத்துவர்கள் ஏச்சரிக்கிறார்கள். நடைமுறைச் சிக்கலான, பெற்றோர் குழந்தை வயது வித்தியாசத்தைக் குறிப்பிட்டு, பொருத்தமற்ற தன்மையையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பழனி பாலாஜி மருத்துவ மையத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வியின் மருத்துவர் செந்தாமரைச்செல்வி, இது அபாயகரமான கருவுறுதல் எனவும் செந்தமிழ்ச்செல்வி நீரிழிவு நோயாளி என்பதையும் குறிப்பிடுகிறார். மாதவிடாய் காலத்தைக் கடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டாலும், அவரது கருப்பை நல்ல நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். “குழந்தை வேண்டாம் என்பதை அவர்களிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர்களது முடிவில் அவர்கள் இருவரும் உறுதியாக இருந்தனர். இயல்பான கர்ப்பகாலமாக அது இருந்தது. குழந்தையின் எடை 3.2 கிலோ” என்றார் மருத்துவர் செந்தாமரைச்செல்வி, டெஸ்ட் ட்யூப் முறைக்கு உதவும் சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறார். வழக்கமான 3வது நாள் சிசு மாற்றத்திற்கு பதிலாக 5வது நாள் சிசு

மாற்றத்தைச் செயல்படுத்தியதாகச் சொல்கிறார். “சிறந்த கருவை உறுதி செய்வதற்காக கொஞ்சம் கூடுதலாக அதை வெளிச்சூழலில் வைத்திருந்தோம்” என்கிறார். பல கருக்கள் உருவாகும் அபாயத்தைத் தடுப்பதற்காக, ப்ளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர் என்னும் முறையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறார் செந்தாமரைச்செல்வி.

“சிறந்த கருவை உறுதி செய்வதற்காக கொஞ்சம் கூடுதலாக அதை வெளிச்சூழலில் வைத்திருந்தோம்”

பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும், கோபிச்செட்டிப்பாளையத்தில் வாழும் அத்தம்பதியினர் இரண்டு நாட்களில் பெயர் சூட்டு விழாவை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார் மருத்துவர் செந்தாமரைச்செல்வி.

தாய்மை அடையும்போது, ஒரு தாய் எத்தனை வயதினராக இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு வரம்பு விதிக்கப்படவேண்டும் என்று சில மருத்துவர்கள் சொல்கிறார்கள். “அபாயமான வழியைத் தேர்ந்தெடுக்கும் தாயுடன், குழந்தையை யார் கவனித்துக் கொள்ளமுடியும் என்ற கேள்வியும் மிக முக்கியமானது” என்கிறார் ஐ.வி எஃப் சிறப்பு நிபுணரும், மருத்துவருமான சித்ரா ஷங்கர்.

“அபாயமான வழியைத் தேர்ந்தெடுக்கும் தாயுடன், குழந்தையை யார் கவனித்துக் கொள்ளமுடியும் என்ற கேள்வியும் மிக முக்கியமானது” என்கிறார் ஐ.வி எஃப் சிறப்பு நிபுணரும், மருத்துவருமான சித்ரா ஷங்கர்.

“45 வயதுக்குப் பிறகு தாய்மை அடைவதை நான் வலியுறுத்தமாட்டேன். இத்தகைய அபாயத்தை ஆய்வு செய்வதற்கு பல வழிகளிலான அணுகுமுறை தேவையானது. 50 வயதுக்குப் பின்பு, நாங்கள் ட்ரான்ஸ்பரை செயல்படுத்துவதில்லை” என்கிறார் அவர்.

ஐ.வி.எஃப் மூலமாக குழந்தை பெறுவதற்கான முயற்சியில் வயதான தம்பதியினர் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டும் அவர், குழந்தைகளை யார் கவனித்து, பேணி வளர்ப்பது என்னும் கேள்வியை ஆர்வலர்கள் எழுப்பி வருவதையும் குறிப்பிட்டார். “53 வயதான பெண்மணி ஒருவருக்கு நான் ஆலோசனை அளித்தேன். தனது சொந்தங்களும், நெருங்கிய குடும்பத்தினரும் ஆதரவாக இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்” என்கிறார் எம்ப்ரியாலஜிஸ்ட்டும், ஆலோசகருமான நீரஜா.

ஐ.வி.எஃப் சாதனத்தை சந்தைப்படுத்தும் ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ஐ.வி.எஃப் தொழில்நுட்பத்தில் தினம் தினம் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், சிறப்பான கரு மாற்றத்தை செய்வதாகக் கூறுகிறார். “என்னைப் பொறுத்தவரை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கு உதவும் நபர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் வழங்கும் அளவுக்கு அந்த பெற்றோர்கள் இருக்கவேண்டும். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் நிலையில் அவர்கள் இருக்கவேண்டும்” என்கிறார்.

‘எனது உறவினர்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அப்படித்தான் நாங்கள் இதுவரை வாழ்ந்திருக்கிறோம்’ என்கிறார் கிருஷ்ணன். அவரது பெண் குழந்தை வளரும்போது, அவருக்குத் தேவையான ஆதரவு கிடைக்காமல்போகும் என்னும் கூற்றை அவர் மறுக்கிறார்.

Share the Article

Read in : English

Exit mobile version