Read in : English
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே, காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்தது; இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, பிப்., 16ல் உத்தரவு பிறப்பித்தது.
இதன் படி, ஒவ்வொரு ஆண்டும், காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி.,தண்ணீரை, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்த, அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்குவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், வரைவு செயல் திட்டத்தை அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வதற்கான வரைவு செயல் திட்டத்தை, மத்திய நீர் வளத்துறை செயலர், யு.பி.சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். தொடர்ந்து, வழக்கு விசாரணை நடந்தது. மத்திய – மாநில அரசுகளின் சார்பில், தங்கள் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது; திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருத்தப்பட்ட செயல் திட்டத்தை, மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், ‘மேலாண்மை வாரியம்’ என்பதற்கு பதில், ‘மேலாண்மை ஆணையம்’ என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
10 உறுப்பினர்கள் :
மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ‘வரைவு செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, 10 உறுப்பினர்கள் அடங்கிய, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, தென்மேற்கு பருவ மழை துவங்கும் முன், இது குறித்த அறிவிப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியானது. மத்திய நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, மத்திய அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது. ‘ஆணையத்தின் தற்காலிக தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலர், யு.பி.சிங் செயல்படுவார்; நிரந்தர தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதுபோல், ஒழுங்காற்று குழு உறுப்பினராக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் பரிந்துரை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
Read in : English